search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள் அவதி"

    குன்னம் அருகே நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர் ஆகிய 2 கிராமங்களில் சாலை அமைக்கும் பணி தாமதத்தால் பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
    குன்னம்:

    ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்ட எல்லைப்பகுதியிலும், அரியலூர் மாவட்ட பகுதியின் அருகிலும் அமைந்துள்ளது நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர் கிராமங்கள். இந்த 2 கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் அரியலூர் மற்றும் பெரம்பலூருக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். விவசாயிகள் அதிகாலையில் அரியலூர் மார்க்கெட்டிற்கு தினசரி டவுன் பஸ்சில் காய்கறி கொண்டு செல்வது வழக்கம். அன்றாடம் 50-க்கும் மேற்பட்டோர் வெளியூருக்கு வேலைக்காக சென்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாக அலுவலகம், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மருத்துவமனைக்கும் செல்வதற்கு 2 கிராம மக்களும் அப்பகுதியில் வரும் டவுன் பஸ்சை நம்பியே உள்ளனர். டவுன் பஸ் மற்றும் புறநகர் பஸ்கள் தினமும் 2 கிராமங்களுக்கு சுமார் 20 நடை வந்து சென்றன.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் உசேன் நகரம் கிராமத்தில் தொடங்கி புஜங்கராயநல்லூர் கிராமம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் நொச்சிகுளம் கிராமத்தில் தெற்குதெருவில் உள்ள வளைவில் புதிதாக தரை பாலம் அமைக்கப்பட்டது. இதன் பணி முடிவுற்று மூன்று மாதங்கள் ஆகின்றது. மேலும் இந்த புதிய தார்ச்சாலையில் 2 சறுக்கு பாலமும் அமைக்க வேண்டி உள்ளது. சாலையின் இருபுறமும் மண் கொட்டப்பட்ட நிலையில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் நிலுவையில் உள்ளது

    கடந்த 5 மாதங்களாக நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர் கிராமத்தின் ஊருக்குள் டவுன் பஸ்கள் வராமல் அரியலூர், பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் கேட்டில் இருந்து வரும் பஸ்கள் ஜமீன் பேரையூர் கிராமத்திற்கு எரிகரை முன்பாகவே இரண்டு கிராம மக்களையும் இறக்கி விட்டு விட்டு உசேன் நகரம் வழியாக அரியலூருக்கும், கூத்தூர் வழியாக ஆலத்தூர் கேட், பெரம்பலூருக்கும் சென்று விடுகின்றன. இதனால் 2 கிராம மக்களும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தான் பஸ் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இரவு நேரத்தில் இருட்டில் நடந்து செல்வது அப்பகுதி மக்களுக்கு சிரமமாகவும் உள்ளது. இதில் சிலர் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்களிடம் பயத்துடன் ‘லிப்ட்’ கேட்டு வந்து செல்கின்றனர். விவசாய பொருட்களை தலைச்சுமையாக தூக்கி செல்கின்றனர்.

    2 கிராம மக்களின் சிரமத்தை போக்க புதிதாக அமைக்கப்படும் தார்ச்சாலை பணியை விரைந்து முடித்தும், நொச்சிக்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்ட பாலத்தின் விடுபட்ட பணிகளை விரைந்து முடித்தும், அந்த கிராம மக்களின் சிரமத்தை போக்கிடுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரி விரைவில் திறக்கப்பட உள்ளதால் மாணவர்களின் சிரமத்தையும் கவனத்தில் கொண்டு போக்கிடுமாறும், அவ்வாறு விரைந்து சாலைப் பணியை முடிக்காமல் காலதாமதம் ஏற்படுத்தினால் அரியலூர்- பெரம்பலூர் சாலையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் நடத்த உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 
    பொன்னேரி பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் கிராம மக்கள் அவதிக்குள்ளானார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது தொடர் கதையாகி வருகிறது. பகல், இரவு பாராமல் துண்டிக்கப்படும் மின்சாரம் பல மணி நேரம் தடை படுவதால் பொதுமக்கள் கோடை காலத்தை சமாளிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

    மின்தடையால் பல இடங்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை அரசூர், பொன்னேரி, மெதூர், தடப் பெரும்பாக்கம், வேன்பாக்கம், இலவம்பேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.

    இதனால் கிராம மக்கள் அவதிக்குள்ளானார்கள். இரவில் புழுக்கத்தால் தெருக்களில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. 12 மணி நேர மின்தடை குறித்து மின் ஊழியர்களிடம் பொதுமக்கள் கேட்டபோது உரிய பதில் கூறவில்லை.

    இதற்கிடையே அரசூர், காட்டாவூர், கூடுவாஞ்சேரி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் பொன்னேரி துணை மின் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு பொறியாளரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

    சுமார் 1500 ஏக்கரில் நெற்பயிர்கள் சாகுபடி செய்து உள்ளோம். அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக மோட்டார்கள் மூலம் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதேபோல் மின்தடையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொன்னேரி போலீஸ் நிலையத்திலும் விவசாயிகள் மனு அளித்து உள்ளனர்.

    இதுகுறித்து பொன்னேரி கோட்ட உதவி செயற் பொறியாளர் பன்னீர் செல்வத்திடம் கேட்டபோது கூறியதாவது:-

    கடந்த 11-ந் தேதி வேண் பாக்கம் துணை மின்நிலை யத்தில் டிரான்ஸ்பார்ம் வெடித்து விட்டது. இது பொருத்தப்பட்டு இரண்டு மாதம் தான் ஆகிறது இதை சரி செய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று மாலை அல்லது நாளை பணி முடிவடையும். அதன்பின் சீராக மின் சாரம் வழங்கப்படும். அதுவரை பொன்னேரி துணை மின் நிலைய கோட்டத்தில் உள்ள ஆலாடு அரசூர், மேட்டுப் பாளையம், இலவம்பேடு, பெரும்பேடு, பொன்னேரி, தேவதானம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சுழற்சிமுறையில் மின்சாரம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது படுகளாநத்தம் கிராமம். இங்கு 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் மினி குடிநீர் தொட்டி ஆகியன மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து இந்த தொட்டிகளில் நீரேற்ற பயன்படும் மின்மோட்டார் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த கிராமத்திற்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    எனவே அந்த பகுதி மக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறார்கள். கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரையில் அவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே காலி குடங்களுடன் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து அவர்கள் கண்டன கோஷங் களை எழுப்பினர். இவர்களது போராட்டம் பற்றி அறிந்தும், அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதனால் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், தாங்களாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    மேலும் இனியும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் தரப்பில் தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    வேதாரண்யம் அருகே குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கள்ளிமேடு ஊராட்சியில் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு நிலத்தடி நீர் உப்பு தன்மையை அடைந்து விட்டது.

    இதனால் இப்பகுதிக்கு கடந்த 25 ஆண்டுக்களுக்கு முன்பு அருகில் உள்ள கிராமமான தாமரைபுலத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் தனியாரிடம் இடம் வாங்கி கிணறு வைத்து அதிலிருந்து தண்ணீர் எடுத்து வழங்கப்பட்டு வந்தது.

    மேலும் இந்த கிராமத்திற்கு அனைக்கரை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் தாமரைப்புலத்திலிருந்து கள்ளிமேட்டிற்கு தண்ணீர் எடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்இணைப்புகள் பாதிக்கப்பட்டது.

    அதனை சீர் செய்வதற்கு அப்பகுதி மக்கள் விடவில்லை. எங்கள் பகுதியிலிருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என கூறி தடுத்துவிட்டனர். இதனால் 25 ஆண்டுகளாக தாமரைப்புலத்திலிருந்து கள்ளிமேட்டிற்கு வழங்கிவந்த குடிநீர் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் அணைக்கரை கூட்டுகுடிநீர் திட்டத்தினை மட்டுமே நம்பி குடிநீர் பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. கோடைகாலம் என்பதால் அணைக்கரை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து வாரத்திற்கு ஒரு முறையே தண்ணீர் வருகிறது.

    அதுவும் குறைந்த அளவில் வருவதால் ஒரு வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு குடம் மட்டுமே பிடிக்கமுடிகிறது. இதனால் கள்ளிமேடு பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது.

    எனவே ஊராட்சி நிர்வாகம் தாமரைப் புலத்தில் உள்ள மின்இணைப்புகளை சரிசெய்து மீண்டும் அங்கிருந்து கள்ளிமேட்டிற்கு குடிநீர் வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருமானூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் சிவன் கோவில் தெரு மற்றும் பள்ளிக்கூட தெருக்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக சிவன் கோவில் தெரு அருகே ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அதன் அருகில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து குடிநீர் இன்றி அப்பகுதி மக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை நடந்து சென்று ஊரின் மேற்குபுறம் உள்ள தெருக்களில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின் மோட்டாரை சரிசெய்ய கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் தேர்தல் நேரமாக இருந்ததால் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியினருடன் ஒன்று சேர்ந்து கோவிலூரில் உள்ள சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், நாராயணன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அப்பகுதி மக்கள் இந்த தண்ணீர் பிரச்சினை மட்டுமின்றி மயானத்திற்கு செல்லும் பாதையில் மின்விளக்கு அமைத்துத்தர வேண்டும் என்றும், ஒரு தனிப்பட்ட நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தண்ணீர் இணைப்பு வைத்து உபயோகப்படுத்தி வருகின்றனர் அதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகளை கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இன்றுக்குள் (அதாவது நேற்று) இந்த ஆழ்குழாய் கிணற்று மின் மோட்டாரை சரி செய்து தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைக்கிறோம் என்றும், மின்விளக்கு மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட தண்ணீர் இணைப்பு செயல்பட்டு வருவதை நாளைக்குள் (அதாவது இன்று) சரி செய்து தருகிறோம் என்றும் உறுதியளித்தனர்.

    இதையடுத்து ஆழ்குழாயில் பொருத்தப்பட்டு இருந்த மின்மோட்டார் உடனடியாக வெளியே எடுக்கப்பட்டு சரிசெய்ய கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன், உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு கோனார் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு 3-வது வார்டில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக கோனார் தெருவிற்கு சரிவர குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து அந்தப்பகுதி பொதுமக்கள் உடையார்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும், அதிகாரிகளால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், உடனே குடிநீர் வினியோகம் செய்யக்கேட்டும் கோனார் தெரு மக்கள் கையில் காலிக்குடங்களுடன் நேற்று திடீரென்று திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த உடையார்பாளையம் போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தரப்பில் எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும், புதிதாக போர்வெல் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு அதிகாரிகள், பேரூராட்சி நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    ஓமலூர்:

    ஓமலூரை அடுத்த பெரியேரிபட்டி ஊராட்சி பெரியேரி பட்டி, ஆதிதிராவிடர் காலனி, தாண்டனூர், ஏரிக்கோடி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம பகுதிகளில் தற்போது கடும் வறட்சி மற்றும் வெயில் காரணமாக, நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளது.

    இதனால் இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் திறந்த வெளி கிணறு அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்டன. எனவே இப்பகுதி மக்கள், மேட்டூர் காவிரி குடிநீரையே நம்பி உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 மாத காலமாக காவிரி குடிநீரும் பெரியேரிபட்டி ஊராட்சி பகுதியில் சீராக வினியோகம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இதன்காரணமாக இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். இது குறித்து ஓமலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பெண்களும், ஆண்களும் காலிக்குடங்களுடன், ஓமலூர்-தாரமங்கலம் ரோட்டில் அம்மன்கோவில்பட்டி பிரிவு ரோடு அருகே நேற்று திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தொளசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக, ஓமலூர்-தாரமங்கலம் ரோட்டில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மோரனஅள்ளியில் குடிநீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி ஒன்றியம் சோக்காடி ஊராட்சிக்கு உட்பட்டது மோரனஅள்ளி கிராமம். இந்த கிராமத்தில் 750 குடியிருப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

    போதிய மழை இல்லாத காரணத்தால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இதனால், ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் குறைந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குறைந்த அளவே தண்ணீர் ஏற்றப்படுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்படும் தண்ணீர் ஒரு மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குடம் தண்ணீர் தான் கிடைக்கிறது. மேலும், ஒகேனக்கல் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு இதுவரை தண்ணீர் வழங்கவில்லை.

    இதற்காக மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட அலுவலரிடம் முறையிட்டும், மனு அளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருகிறோம். மாமரங்களுக்கும் டிராக்டர் மூலம் தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்றி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    ராமநாதபுரம் அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கை, கால், மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு வலிப்பதாக தெரிவிக்கின்றனர். தொடர்ந்து காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், பனைக்குளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கை, கால், மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு வலிப்பதாக தெரிவிக்கின்றனர். கிராமத்தில் தொடர்ந்து காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் குமரகுரு கூறியதாவது:-

    மருத்துவ குழுவினர் பனைக்குளம் கிராமத்தில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். என்ன காய்ச்சல் என்பது பற்றி ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

    குமரி மாவட்டத்தில் மழையின்போது சூறாவளி காற்று வீசியதால் மரக்கிளைகள் வேரோடு சாய்ந்தன. மரக்கிளைகள் மின் கம்பங்களில் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. #Kanyakumarirain
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மே மாதம் தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை காரணமாக அணைகள் மற்றும் நீர் நிலைகளில் தண்ணீர் பெருகியது.

    இதன் பிறகு கடந்த 10 நாட்களாக மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று பகல் குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்தது. குழித்துறை, மார்த்தாண்டம், குளச்சல் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. அதன்பிறகு இரவு மாவட்டம் முழுவதும் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இடி, மின்னலுடன் விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. பலத்த சூறாவளி காற்றும் வீசியது.

    கோழிப்போர்விளை, முள்ளங்கினா விளை, ஆனைக்கிடங்கு போன்ற பகுதிகளில் அதிக மழை பெய்து உள்ளது. இந்த பகுதி களில் 4 மணி நேரத்திற்கு மேல் மழை கொட்டித் தீர்த்தது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக தக்கலையில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நாகர்கோவில், ஆரல்வாய் மொழி, கொட்டாரம், திற்பரப்பு, குலசேகரம், மார்த்தாண்டம் உள்பட மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது. மழையின் போது சூறாவளி காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரக்கிளைகள் மின் கம்பங்களில் விழுந்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மலையோர கிராமங்களான கீரிப்பாறை, வெள்ளம்பி, காளிகேசம் ஆகிய பகுதிகளில் மரம் விழுந்ததால் அந்த கிராமங்கள் இருளில் மூழ்கின. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    நாகர்கோவிலிலும் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. நாகர்கோவிலில் இன்று காலையும் மழை நீடித்ததால் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ, மாணவிகள் குடை பிடித்தபடி சென்றனர். இந்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    குளச்சல் பகுதியிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் மின்னல் தாக்கி குளச்சலில் உள்ள அண்ணா சிலை சேதம் அடைந்தது. மேலும் அருமனை, மிடாலம் பகுதிகளில் 2 வீடுகளும் மழை காரணமாக சேதம் அடைந்தது.

    கோதையாற்றில் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் கொட்டுகிறது. இந்த மழை காரணமாக அணைகளுக்கும் நீர் வரத்து தொடர்ந்து அதிகளவில் வந்த வண்ணம் உள்ளது. இன்று காலை நிலவரப்படி பெருஞ்சாணி அணையில் 73.55 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 314 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பேச்சிப்பாறை அணையில் 17.80 அடி தண்ணீர் உள்ளது. 496 கனஅடி தண்ணீர் வருகிறது. 656 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத் துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி உள்ளது.

    குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தக்கலை-153, கோழிப் போர்விளை-150, முள்ளங்கினாவிளை-138, இரணியல்-71, பாலமோர்- 66.8, புத்தன் அணை-54.2, பேச்சிப்பாறை-34.6, பெருஞ்சாணி-53.6, சிற்றாறு 1-52, சிற்றாறு 2-67, மாம்பழத்துறை யாறு-115, நாகர்கோவில்-78, பூதப்பாண்டி-24.2, சுருளோடு-60, கன்னிமார்-8.6, ஆரல்வாய்மொழி-4.2, மயிலாடி-45.2, கொட்டாரம்-52.4, ஆனைக்கிடங்கு-122, குளச்சல்-44.6, குருந்தன்கோடு-90.4, அடையாமடை-78, திற்பரப்பு-67.8.  #Kanyakumarirain

    ×